Published Date: September 30, 2024
CATEGORY: CONSTITUENCY
ஸ்டார்ட் அப் திருவிழா:
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பாக தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா 2024 தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இங்கு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் புத்தொழில் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும் இந்த திருவிழா இரண்டாம் நாள் நடத்தப்பட்டது. 2வது நாளாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
அவர் பேசும் போது,
இந்தியாவில் ஆண்டுதோறும் இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் பட்டம், பட்டயம் பெறுவோரின் 20 % பேர் தமிழகத்திலிருந்து உருவானவர்கள். திராவிட இயக்கங்களில் நூற்றாண்டுகால வளர்ச்சியினால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதனால் அதற்கு இணையான வேலை வாய்ப்பு வசதிகள், முதலீடுகள் கிடைக்கப் பெறுவதில்லை.
கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்:
இந்த இடைவெளியை போக்க தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அயல் நாடுகளில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி உட்பட பல்வேறு உதவிகள் அரசு சார்பில் அளிக்கப்படுகின்றன. அதே போன்று புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அடிப்படையிலேயே புத்தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களை நேரடியாக அரசு கொள்முதல் செய்வதற்கேற்ப சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்துக்கு இது போன்ற ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகள் மிகவும் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசுசெயலாளர் அர்ச்சனா பட்நாயக் பங்கேற்று தமிழ்நாடு புத்தொழில் ஆதாரம் நிதியின்கீழ் (டான் சீட்) மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.16.40. கோடி முதலீட்டு ஆணைகள் வழங்கினார்.
கண்காட்சி:
விழாவில் தொழில்முனைவோர், முதலிட்டாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் பன்முக தொழில்முனைவோர் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் 11 முக்கிய பேச்சுகள், 3 உரையாடல்கள் மற்றும் 9 குழு விதாங்கள் இடம்பெற்றன. அவை புதுமை, தொழில் நுட்பம், முதலீடு மற்றும் ஸ்டார்ட் அப் சூழமைவின் எதிர்காலம் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடாக்கியதாக இருந்தது. கண்காட்சியில் ஸ்டார்ட் அப் டி என் மூலம் அமைக்கப்பட்ட வெப் 3 மெட்டாவர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் அரங்கம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது தவிர 60-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில் முதலீட்டாளர்களுக்கு தங்களது நிறுவனம் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, ஸ்டார்ட் அப் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், மதுரை மண்டல சி.ஐ.ஐ. துணைத்தலைவர் அஸ்வின் தேசாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Media: DAILYTHANTHI